சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தும் பரிசோதனை நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மையத்தில், கரோனா தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு, விலங்குகளுக்கு பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் அதற்கான ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையமும், கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜூன் மாதம் முதல் ஈடுபட்டுவருகிறது. தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனைகள் முடிக்கப்பட்டு அதன் ஆய்வறிக்கை மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.
இதை ஆய்வு செய்தபின் முதற்கட்டமாக விலங்குகளிடம் அந்த மருந்தை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சிறு விலங்குகளான முயல், எலி போன்ற விலங்குகளிடம் இந்த மருந்து பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக மனிதர்களிடம் இந்த மருந்து சோதனை செய்ய அனுமதி பெறப்படும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.