வாட்ஸ் அப்
உலகம் முழுவதும் உள்ள 180க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த செயலியை ஆறு ஆண்டுகளுக்கு முன் பெரும் தொகைக்கு பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது.
அத்துடன் அந்நிறுவனம், வாட்ஸ் அப்பில் End To End என்கிரிப்ஷன் மட்டும் தொடரும் என்றும், இச்செயலிக்கு எதிர்காலத்தில் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவித்தது.
புதிய நிபந்தனைகள்
இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப்பின் தனிநபர் கொள்கையில் புதிய நிபந்தனைகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கொள்கைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், வரும் பிப்ரவரி 8 முதல் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது என்றும் பயனர்களுக்கு பாப் அப் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
மேலும் இந்த நிபந்தனைகளில், பயனர்களின் தகவல்களை அந்நிறுவனம் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து சர்ச்சையை கிளம்பிவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாட்ஸ் அப் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி மட்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்தால்
வாட்ஸ்அப் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்தால், அது தனிநபர் தகவல்களை நாமே முன்வந்து தருவதற்கு ஒப்பாகும் என இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் வாட்ஸ் அப் நிபந்தனையால், தனிநபரின் இருப்பிடம், மொபைல் மாடல், பேட்டரி எண், வங்கி கணக்கு எண், குறுஞ்செய்தி தகவல்கள், இணையவழி பணபரிமாற்றம் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனத் தேவைக்காக பயன்படுத்தப்படும்.
இதுகுறித்து பேசிய சைபர் கிரைம் அதிகாரி கார்த்திகேயன்,
"பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே இது போன்ற தனிநபர் தகவல் பரிமாற்றம் கொள்கை கண்காணித்து வருகிறது. இதற்கு ஒப்புகொள்பவர்கள் மட்டுமே தொடர்ந்து அந்த நிறுவன செயலியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். வேறு விதமான செயலிகளை உபயோகப்படுத்தினாலும் எதிர்காலத்தில் இதுபோன்ற ஒப்புதல் அளிக்க வேண்டும். இதை தவிர்க்க முடியாது. தனிநபர் தகவல்களை பாதுகாக்க நினைப்பவர்கள் கூகுள் மெயில் உள்ளிட்டவை மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பலாம்" எனத் தெரிவித்தார்.
மாற்று செயலிகள் பயன்பாடு
இந்த அறிவிப்பால், பயனர்கள் மாற்று தகவல் பரிமாற்றச் செயலிகள் பயன்பாட்டை சூடுபிடிக்க வைத்துள்ளது. தனிநபர் பாதுகாப்பு கொள்கையால், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளின் தரவிறக்கும் தற்போது அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக ’சிக்னல்’ செயலி ஆப் ஸ்டோரில் வாட்ஸ் அப்பை பின்னுக்குத் தள்ளி அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்படும் செயலியாக உயர்ந்திருக்கிறது.
சிக்னல் செயலி சிறப்பம்சம்
- வாட்ஸ் அப் செயலியில் உள்ள அனைத்து அம்சங்களும் சிக்னல் செயலியில் உள்ளன.
- இந்தச் செயலியில் End To End என்கிரிப்ஷன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- இலவச வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வசதி
- பயனர் தகவல்கள் நிறுவனத்தால் பயன்படுத்தப்படமாட்டாது.
இதையும் படிங்க: என்னது வாட்ஸ்அப் பாதுகாப்பு இல்லையா... புதிய கொள்கையால் பாதையை மாற்றும் பயனர்கள்!