உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. தடுப்பூசி மருந்துகள் மனிதர்கள் மீது சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், முக்கிய சமூக ஊடகமான ட்விட்டரில், கரோனா தொடர்பான பல போலியான தகவல்கள் அதிகம் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன.
போலியான கரோனா பதிவு
இதைக் கருத்தில்கொண்டு, போலியான கரோனா பதிவுகளைக் கண்டறிந்து நீக்கிட அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது. விதியை மீறி ட்வீட் செய்பவர்கள், அதனை உடனடியாக நீக்கிட வேண்டும். இல்லையென்றால், அடுத்த ட்வீட்டை அவர்களால் பதிவு செய்திட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
"ஆதாரமற்ற வதந்திகள், சர்ச்சைக்குரிய கூற்றுகள், தடுப்பூசிகளைப் பற்றிய முழுமையற்ற தகவல்களைப் பதிவிடக் கூடாது" என ட்விட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்கள் தீவிரம்
இதேபோல், பேஸ்புக், யூ-ட்யூப் நிறுவனங்களும் கரோனா தொடர்பான தகவல் நீக்கப்படும் என அறிவித்திருந்தன. மக்கள் மத்தியில் கரோனா குறித்த தவறான தகவல் பரவி விடக்கூடாது என்ற முனைப்பில் சமூக ஊடக நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.