இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து மோசமாகிவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு 40 முதல் 70 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. மேலும், தற்போது பெரும்பாலான செய்தி நிறுவனங்களும் தங்கள் செய்திகளை ஃபேஸ்புக்கின் நேரலையில் வழங்குகின்றன. இதனால் ஃபேஸ்புக்கின் பயன்பாடும் பெருமளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பப்படும் லைவ் வீடியோக்களைப் பார்க்க ஃபேஸ்புக்கில் கணக்கு வைதிருக்க வேண்டியது கட்டாயமில்லை என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்வரை கணினியில் மட்டுமே லைவ் வீடியோக்களை ஃபேஸ்புக் கணக்கின்றி பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த வசதி, ஃபேஸ்புக்கின் ஆண்டிராய்டு செயலிக்கும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இது ஐபோன்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒலியை மட்டும் கேட்க உதவும் 'Audio only' என்ற ஆப்சனுக்கும் பணியாற்றிவருவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
முன்னதாக ஊரடங்கு உத்தரவு காரணமாக பயன்பாடு அதிகரித்ததால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வீடியோக்களின் தரம் குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா - பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 500 கோடி அளித்த பேடிஎம்