டெல்லி: ஃபிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஃபிளிப்கார்ட் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் ஒன்றை தொடங்கி மளிகைக் கடை, சிறு, குறு வணிகர்களை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட்டின் இந்த முடிவு அமேசான், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட் சேவைக்குப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட், மொத்த விற்பனையக திட்டத்திற்கான பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதில் முதற்கட்டமாக மளிகை மற்றும் அழகுசாதனப் பொருள்கள் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. இத்திட்டத்திற்கான தலைமைப் பொறுப்பை ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆதார்ஷ் மேனன் ஏற்கிறார். இவருடன் இணைந்து வால்மார்ட் இந்தியாவின் தலைமைச் செயல் அலுவலர் சமீர் அகர்வால் பணியாற்றுவார்.
இந்தியனாக தலை நிமிருங்கள்: ஜியோ தருகிறது முற்றிலும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!
வால்மார்ட்டில் பணியாற்றிவரும் ஊழியர்கள் ஃபிளிப்கார்ட் குழுமத்திற்கு மாற்றப்படுவர். இந்தியாவின் விலை குறைந்த பிராண்டாக இருக்கும் வால்மார்ட், தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் என்றும் ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.