கரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் தற்போது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்துவருவதால் முக்கிய கூட்டங்கள் அனைத்தும் ஜூம் வழியாக நடைபெற்றுவருகின்றன.
இருப்பினும், ஜூம் தளத்தில் பல பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்நிலையில், பிரபல வீடியோ கான்பரன்சிங் தளமான ஜூம், ‘அட் ரிஸ்க் மீட்டிங் நோடிஃபயர்’ என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜூம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இணையத்தில் இருக்கும் ஜூம் மீட்டிங் குறித்த தகவல்களை கொண்டு, அந்த மீட்டிங்குகளை சீர்குலைக்க யாராவது முயல்கின்றனரா என்பதை ஆராய்ந்து, கணக்கு உரிமையாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை அனுப்பப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு குறிப்பிட்ட மீட்டிங் குறித்து தகவல்கள் இணையதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டால், அத்துடன் என்ன ஹேஷ்டெக் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆராயப்படும். அவ்வாறு ஆராயும்போது அவை ஆபத்தானதாக இருக்குமேயானால் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.
மேலும் ஜூம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்பின் அறியாதவர்கள் அதிகம் பங்கேற்கும் மீட்டிங்கை நடத்த விரும்பினால், தயவு செய்து அதை வெபினாராக மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், அவ்வாறு மாற்றினால்தான் பங்கேற்பாளர்களின் வீடியோ, ஆடியோ ஆகியவற்றை நிர்வாகியால் கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாணடில் ஜூம் செயலியில் மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 200 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 458 விழுக்காடு அதிகமாகும்.
இதையும் படிங்க: லக்ஷ்மி விலாஸ் வங்கியில் 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது!