ஹைதராபாத் : உலக அளவில் கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படும் அளவுக்கு அப்படி என்ன செய்தார் மலாலா?
உலகளவில் 6 கோடியே 10 லட்சம் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத அவல நிலையில் வாடுகின்றனர். அதில் ஒருவராக இருந்த மலாலா அந்நிலையில் இருந்து தானும் மீண்டு, மற்றவர்களையும் மீட்கும் வரலாற்று கடமையை செய்து வருகிறார்.
2003 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்பான தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் அவதியுற்று வந்தனர். குறிப்பாக, அவர்களின் ஆதிக்கத்தின் காரணமாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகளில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டனர்.
மலாலா என்னும் ஒளிக்கீற்று
இதனால், 50 ஆயிரம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். பெண்கள் கல்வி உரிமை முற்றும் முழுதாகப் பாதிக்கப்பட்டது. இக்கொடுமைகளை எதிர்த்து 2009ஆம் ஆண்டில் தன் எழுத்தின் மூலம் தலிபான்களின் அட்டகாசங்களை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியதே உலகிற்கு மலாலா யாரென காட்டியது.
அப்போது வெறும் 11 வயதேயான சிறுமி மலாலாவுக்கு எழுத்தின் மீது தீராத காதல் இருந்தது. அவற்றை தனது டைரிக் குறிப்பாக தொகுத்து வைத்திருக்கும் பழக்கமாக அவர் மாற்றியிருந்தார். சீருடை அணியாமல், சாதாரண உடை அணிந்து, புத்தகங்களை மறைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்று வந்த மலாலாவின் ஒவ்வொரு எழுத்தும் தலிபான்கள் இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகளை ஆவணப்படுத்தி இருந்தது.
தலிபான்கள் குறி
மலாலா மீது அக்கறை கொண்டவர்கள் நினைத்ததுபோல, தலிபான்களின் 'எதிரியாக' அவர் காலத்தால் மாறியிருந்தார். அவளை கொல்ல சதித்திட்டம் தீட்டிய தலிபான்கள், பாகிஸ்தானின் மின்கோரா அருகே உள்ள பள்ளி வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது மலாலா மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்தது.
தலை முதல் கால் வரை தோட்டாக்களால் துளைக்கப்பட்ட மலாலா படுகாயத்துடன் உயிருக்குப் போராடியபடி மயக்க நிலையில் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பாகிஸ்தான் ராணுவம், உயிருக்குப் போராடிய நிலையிலிருந்த மலாலாவைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிர் பிழைத்த மலாலா
உரிமைக்காகப் போராடிய சின்னஞ்சிறு சிறுமி உயிருக்குப் போராடுவதை அறிந்த உலக மக்களுக்கு தலிபான்கள் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீதான கோபமும் மிகுதியானது. சர்வதேச சமூகம், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டனக் குரல் எழுப்பி, எதிர்த்தனர்.
இதனிடையே, மலாலாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு ஏற்பாடு செய்தது. நினைவு இழந்த நிலையில் சிறப்பு விமானம் மூலமாக லண்டன் அழைத்துச் செல்லப்பட்ட மலாலாவின் உயிரை மருத்துவர்கள் போராடி மீட்டனர்.
சர்வதேச அங்கீகாரம்
உயிர் பிழைத்த மலாலா 'இனி, தானுண்டு; தன் வாழ்வுண்டு' என தனக்கு கிடைத்த செல்வாக்கை வைத்து ஏதோ ஒரு வெளிநாட்டில் மீதமுள்ள, தன் வாழ்வை சொகுசாக கழிப்பார் எனப் பலரும் நினைத்தனர். ஆனால், மலாலாவோ இப்போது இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தியை உலகிற்கு சொன்னார்.
தன்னுயிருக்கு ஆபத்தான பாகிஸ்தானுக்கே மீண்டும் செல்ல முடிவெடுத்திருப்பதாக அவர் அறிவித்தது, லட்சக்கணக்கான உள்ளங்களில் மலாலாவுக்கு நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது. ஆசியாவிலேயே பெண் கல்வியில் பின்தங்கி இருக்கும் பாகிஸ்தானை 'கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் தேசமாக மாற்ற' உழைப்பேன் என்ற அவரது பிரகடனமும், அந்த கனவை நோக்கிய அவரது பயணமும் ஐ.நா.வின் அங்கீகாரத்தைத் தேடித் தந்தது.
ஐ.நா. தூதர்
பெண் கல்விக்காகப் போராடும் அவருக்கு, ஐ.நா.வின் சிறப்பு தூதர் அங்கீகாரம், நோபல் பரிசு என சர்வதேச அரங்கில் பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்தன. அண்மையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவ அரசியல் மற்றும் பொருளாதாரம் பாடப்பிரிவில், தனது பட்டப்படிப்பைப் பெற்ற மலாலா, உலகளாவிய பெண்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய, மலாலா அறக்கட்டளையை நிறுவி, மக்கள் பணியாற்றி வருகிறார்.
இந்த மலாலா பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள மின்கோரா என்ற பகுதியில் ஸியாவூதின் யூசுப்சாய், பெகைய் யூசுப்சாய் என்ற தம்பதிக்கு 1997ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மகளாக பிறந்தார். இன்று 24ஆவது பிறந்தநாள் கொண்டாடும் மலாலாவுக்கு ஈடிவி பாரத் சார்பாக வாழ்த்துகள்!
இதையும் படிங்க : 'வன்முறைகளுக்கிடையே வளர்ந்த காஷ்மீர் குழந்தைகள்...!'