கடந்த சில வருடங்களாக இந்த மார்ச் மாதத்தில் நாம் அதிகமாக படிக்கும் செய்தி அழிந்து வரும் சிட்டுக்குருவி பற்றிதான். இதன் அழிவிற்கான காரணம் நகரமயமாதலும், செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் என்று கூறி வருகிறோம். உண்மையில் சிட்டுக்குருவியை மட்டுமல்ல... பறவைகளின் வாழ்விடத்தை அழிப்பதே மனிதர்களாகிய நாம்தான்.
நாம் குழந்தையாக இருக்கும்போது வளர்ந்து வந்த வீடு மற்றும் கூரை முற்றங்களில் குருவிக் குஞ்சுகளின் சத்தங்களை கேட்டு அதனை பாதுகாப்பாக வளர்த்து வந்தோம். ஆனால் தற்போது அதற்கான சுவடுகளே மறைந்து விட்டன. அடுத்த தலைமுறைகளுக்கு அதை எடுத்து சொல்லவும், நாம் மறந்து விட்டோம் என்பது கவலை தரக்கூடியதாக இருக்கிறது.
பறவைகள் என்றாலே அழகுதான். அதிலும் நமது வாழ்விடத்திலேயே சிறகுகளை விரித்து சிறகு, சிறுகாய் கூடுகளை கட்டி மகிழ்ச்சியுடன் நமது மனதிற்குள் இணக்கமாய் வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள், தற்போது நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டன. அழிந்துகொண்டிருக்கும் இந்த பறவை இனத்தை காக்க வேண்டியது நமது தலையாய கடமை ஆகும்.ஆண்டுதோறும் மார்ச் 20-ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி நாளாக கொண்டாடி வருகிறோம்.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுக்கூரப்படுகிறது.இந்த நாளை சிறப்பிக்கும் விதமாகவும் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் வகையிலும் சமூக ஆர்வலர்கள் தங்களது பணியை சிறப்பித்து வருகின்றனர்.
இதுதவிர, ஆராய்ச்சி மற்றும் கல்லூரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் ஆகியோர் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க அரும்பாடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சிட்டுக்குருவிகளை காத்து இதனை அடுத்த தலைமுறைக்கு பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரியை சேர்ந்த ஐபிஎப் தொண்டு அமைப்பு ஒன்று களம் இறங்கியுள்ளது.
இது குறித்து தொண்டு நிறுவன தலைவர் ராம், நமது ஈடிவி பாரத் செய்திக்காக பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது;
நமது எதிர்கால தலைமுறைக்கு சிட்டுக்குருவிகளின் இனத்தை காட்ட வேண்டிய பொறுப்பு இந்த தலைமுறையினருக்கு அதிகம் இருக்கிறது. எனவே சிட்டுக்குருவியை பாதுகாத்து வளர்க்க மக்களிடம் இலவசமாக கூண்டுகள் வழங்கி வருகிறோம். தொழில்நுட்பங்கள் வளராத காலகட்டத்தில் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் அவற்றிலுள்ள மர வாரைகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன.தற்போது புதிதாக கட்டப்படும் வீடுகளில் அத்தகைய வசதி இல்லாததால் அவை ஏசி இடுக்குகளிலும், ஆபத்தான கரண்ட் பெட்டி அருகேயும் கூடுகட்டி வாழ்ந்து வருத்தத்தை தருகிறது"என சோகத்துடன் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், தாய் இல்லாமல் அனாதையாக நாதியற்று தத்தளித்து வரும் குழந்தைபோல் இந்த சிட்டுக்குருவிகள் இறப்பது பெற்ற குழந்தையை இழந்து தவிப்பது போன்ற வேதனையை தருகிறது. எனவே, அழிந்து வரும் இந்த சிட்டுக்குருவிகளை பாதுகாக்க கல்லூரி மாணவர்கள் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் ஐபிஎப் அமைப்பை ஏற்படுத்தினோம்.எங்கெங்கு சிட்டுக்குருவிகளின் வருகைகள் அதிகம் உள்ளது என்பதைக் கண்டறிந்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ரூ.200 மதிப்புள்ள கூண்டுகளை இலவசமாக அளித்து வருகின்றோம், என்றார்.
மாணவர்களிடம் இருந்து சிட்டுக்குருவி கூண்டு பெற்ற தனசேகரன் கூறுகையில், இத்தகைய மாற்று சிந்தனை உள்ள மாணவர்களின் செயல் பிரமிக்க கூடிய வகையில் உள்ளது. இந்த இனங்களை காப்பது எனது கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற முயற்சியால் மீண்டும் நம் வீடு முற்றங்களிலும் சிட்டுக்குருவி ஓசைகள் ஒலிக்கத் தொடங்கும் என்ற நம்பிக்கையை இந்த சமூக அமைப்பினர் உருவாக்கியுள்ளனர்.