1999 ஜூலை 23ஆம் தேதி, என்றும்போல் அன்றும் சிரமமில்லாத நாளாகவே விடிந்தது. மாஞ்சோலை தோட்டத்தில் கொத்தடிமைகளாக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஊதிய உயர்வு கேட்டும், முன்பு நடந்த போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். இந்தப் போராட்டத்தில் தமாகாவைச் சேர்ந்த எஸ்.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் வழிநடத்திச் சென்றனர்.
70 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக ஊதிய உயர்வு, ஏற்கனவே கைது செய்யப்ட்ட 625 தொழிலாளிகளை விடுவிக்க வேண்டும், பெண்களின் மகப்பேறு காலத்தில் விடுமுறை, எட்டு மணி நேர வேலை இவைதான் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையாக வைக்கப்பட்டது. இதற்காக ஒன்று திரண்ட மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சற்று தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். திறந்த ஜீப்பில் போராட்டத்தை வழிநடத்தி சென்ற தலைவர்கள் தங்களை மட்டுமாவது உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதி கோரினர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் பொறுமையிழந்த மக்கள் தாமிரபரணி ஆற்றைக் கடந்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க முற்பட்டனர். இதனால் கோபமடைந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காவல்துறையினரின் எதிர்பாராத தாக்குதலை கண்டு நிலைகுலைந்துபோன மக்கள் செய்வதறியாது தவித்தனர். ஒருபக்கம் மதில் சுவர், மறுபக்கம் வற்றாத தாமிரபரணி ஆறு இதற்கு நடுவில் சிக்கிக்கொண்ட மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆற்றில் குதித்தனர். கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டிய காவல்துறை எப்பொழுதும் முதலாளிகளுக்கும், ஆதிக்க முதலைகளுக்கும் அடியாள் கூட்டம் என்பது பட்டவர்த்தனமாய் தெரிந்த தினம் அன்று.
காவல்துறையின் லத்தி ஒவ்வொருவரின் மண்டையை பதம் பார்க்கிறது. வட்ட முகத்தில் கருப்பு மையிட்டு முத்தமிட்டு ஆசையாய் வளர்த்த ஒன்றரை வயது மகனின் உயிரைக் காப்பாற்ற ரத்தினமேரி விக்னேசை கரையில் தூக்கி வீசுகிறார். பிஞ்சுக் குழந்தை என்றும் பாராத கல்நெஞ்சம் படைத்த காவல்துறை, தாமிரபரணியில் அச்சிறுவனை தூக்கி எறிந்தது.
காவல்துறை கண் இமைக்கும் நொடிகளில் மக்களை தண்ணீருக்குள் தள்ளிவிட்டு கற்கலாலும், செங்கலாலும் கல்வீச்சு நடத்தியது. இந்தக் கொடூரத் தாக்குதலில் விக்னேஷ் என்ற சிறுவன், அவனது தாய் ரத்தினமேரி உட்பட 17 பேர் உயிரிழந்தனர். அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால்தான் மக்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என விளக்கமளித்தார். பாமர மக்களின் காவலன் என கூறப்படும் திமுகவிற்கு எதிராக குரல்கள் எழுந்தன. 17 பேரின் மரண ஓலத்திற்கு பிறகு 130 ரூபாய் ஊதிய உயர்வு கிடைத்தாலும் மக்களின் ரத்தக் கண்ணீர் கலந்த அழுகுரல் தாமிரபரணி ஆற்றில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
அப்பொழுது இந்த சம்பவத்திற்கு சான்றாக வெளியான ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த 'ஒரு நதியின் மரணம்' ஆவணப்படம் தமிழகத்தையே உலுக்கியது. வெறுமனே காவல்துறை – பொதுமக்கள் பிரச்சனையல்ல. இதில் நுட்பமாக வர்க்க அரசியலோடு, சாதி ஆதிக்கமும் இணைந்து செயல்படுகிறது. ஆதிக்க வன்மம் கொண்ட காவல்துறை பெண்களை மானப்பங்கப்படுத்தியதால் தடியடி நடத்தினோம் என்றது. தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்தவர்கள் காவல்துறையினரால் சாகடிக்கப்படவில்லை தண்ணீரில் மூழ்கி இறந்தனர் என்று அரசு தரப்பு தெரிவித்து ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நீதியை அடியோடு கூண்டில் ஏற்றியது.
அன்றைய முதலமைச்சரும், போராட்ட குணம் கொண்டவருமான கருணாநிதி, மாஞ்சோலை கலவரத்திற்கு காரணமானவர்கள் மீதும், காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதுதான் காரணமாக பார்க்கப்பட்டது. கல்லடி, துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளா? தலித்துகளுக்கு ஒரு அநீதி இழைக்கும்பொழுது வேடிக்கை பார்க்கும் அரசியல் தந்திரம் கொண்ட பார்வையா என கருணாநிதி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான விரோதப்போக்கு அவர்களது பாரம்பரியங்களில் ஊறிப்போன ஒன்றுதான். வரலாறு எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுகமானதாக இருந்ததில்லை. கீழ்வெண்மணியில் தொடங்கி, வாச்சாத்தி கொடியன்குளம், ராமநாதபுரம், நத்தம் காலனி வரையிலும் நீங்கள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியவர்களே, சமஉரிமை என்பது கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்பதை ஆளும் வர்க்கங்கள் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் நிகழ்ந்த மாஞ்சோலை படுகொலை நடந்து இன்றுடன் 20 வருடங்கள் கடந்துவிட்டன.
நெஞ்சை ரணமாக்கிய இச்சம்பவம் நடந்தபோது அதற்கு எதிராக குரல் கொடுக்காத பல முற்போக்குவாதிகள், அரசியல் தலைவர்கள் இன்று வீரவணக்கம் என கூச்சலிடுவது தான் வேதனை!