விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, அதன்பின்னர் நடக்கும் ஒன்பது நாள்கள் கொண்டாட்டங்களும் பிரசித்திபெற்றவை. அந்த வகையில் இன்று மிகவும் அரிதான விநாயகர் கோயில் குறித்து பார்க்கலாம்.
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள தோலக்கு மலையின் சிகரத்தில் இரண்டு ஆயிரத்து 500 அடி உயரத்தில் விநாயகர் சிலையொன்று அமைந்துள்ளது.
இக்கோயிலில் விநாயகர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல்புறத்தில் உள்ள வலக்கையில் கோடரியையும், இடக்கையில் உடைந்த தந்தமும் வைத்திருக்கிறார்.
அபய முத்திரையுடன் காணப்படும் கீழேயுள்ள வலக்கையில் ருத்ராட்ச மாலையையும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும் காணப்படுகிறார்.
முன்னொரு காலத்தில் பரசு ராமருடன் ஏற்பட்ட போரில் விநாயகரின் தந்தம் உடைபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ஆகவே, இவரை மக்கள், “ஏகாதந்தா” என அழைக்கின்றனர். அந்தக் கிராமம் பரஸ்பல் என்றே அழைக்கப்படுகிறது. இது பரசுராமரின் கோடரியை குறிக்கும் பர்ஸா என்ற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகும்.
இங்கிருக்கும் விநாயகரின் சிலையை சிந்தாக் நாகவன்ஷி மன்னர்கள் 11ஆம் நூற்றாண்டில் நிறுவியதாக வரலாறுகள் கூறுகின்றன.
அதன்பின்னர் பஸ்தார் பழங்குடியின பெண் ஒருவர் இச்சிலையை வழிபட்டுவந்துள்ளார். அவருக்கு பின்னர் போகா பழங்குடியினர் தொன்றுதொட்டு இச்சிலையில் வழிபாடு நடத்துகின்றனர்.
மேலும் இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலமாக மே மாதத்தில் மூன்று நாள்கள் திருவிழா நடத்தப்படும். அப்போது, விநாயகர், பரசுராமர் மற்றும் உள்ளூர் தெய்வங்களின் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும்.
இங்குள்ள விநாயகர் கோயிலின் மீது எவ்வித குவிமாடமும் கட்டப்படவில்லை. சிகரத்தின் மேல் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலையை வழிபாடு நடத்துவதும் அவ்வளவு எளிதல்ல.
பாதை இல்லாத மலைகள், பள்ளத்தாக்குகளை கடந்து செல்ல வேண்டும். மக்கள் இங்கு அரிதாக வருவதற்கு இதுவும் காரணம்.
இருப்பினும் இங்குள்ள மக்கள் விநாயகரை தொடர்ந்து வழிபட்டுவருகின்றனர். இங்கு பாதை மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தும்போது உள்நாடு, வெளிநாட்டிலிருந்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளை பெருமளவு ஈர்க்க முடியும். இதில் மாநில அரசும் சுற்றுலாத்துறையும் கவனம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: மன அழுத்தம் போக்கும் உஜ்ஜைனி விநாயகர்!