திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இஸ்ரோவில் பணி புரிந்துவரும் அர்ஜுனனுக்கு நிஷாந்த் என்ற ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நிஷாந்த் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மும்பையில் வீடியோ கிராபிக்ஸ் தொடர்பான பயிற்சி பெற்று வந்துள்ளார். கரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், திடீரென நேற்று முன்தினம் நிஷாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிருக்கு போராடிய நிஷாந்தை பெற்றோர் மீட்டு உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, நிஷாந்தின் உடல் அரசு மருத்துமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் தற்கொலை வழக்குப் பதிவு(174) செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் நிஷாந்த் ஏற்கனவே ஆன்லைன் நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாகவும், வீட்டில் 24 மணி செல்போனில் ஆன்லைனில் மூழ்கியபடி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், அவரது பெற்றோர் நிஷாந்தை கடுமையாக கண்டித்துள்ளனர். பெற்றோர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான நிஷாந்த், ஆன்லைன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி குடித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், நிஷாந்த் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து அவரது தற்கொலை காரணம் குறித்தும் உண்மையாகவே, ஆன்லைனில்தான் விஷம் வாங்கினாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு அனுமதி கூடாது - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்