கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், வித்யா தனது தோழியின் சகோதரி திருமணத்துக்காக கடந்த 6ஆம் தேதி திருநள்ளாறு சென்றார். அதன்பின் பெற்றோர்கள், வித்யாவை தொடர்பு கொண்டபோது, அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, வித்யாவை தான் கடத்தியதாகவும் அவரை விடுவிக்க 10 லட்சம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வித்யாவின் தந்தை ஆறுமுகத்துக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் வித்யாவின் சகோதரர் விக்னேஷ் புகார் அளித்தார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்ட செல்ஃபோன் எண் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், பணம் கேட்டு மிரட்டிய நபர் காரைக்காலை சேர்ந்த மனோஜ் (24) என்பது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் அவரை கடலூரில் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தில் ஏஜெண்டாக அவர் பணியாற்றுவதும், கடந்த இரண்டு வருடங்களாக வித்யாவை காதலித்து வருவதும் தெரியவந்தது.
இருப்பினும், கனடாவுக்கு செல்ல முயன்றபோது 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டதால் தனது தந்தையிடம் பணம் உள்ளதாக வித்யா தெரிவித்தார். அதனாலேயே தனது தோழி அக்ஷயாவுடன் இணைந்து கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் மனோஜ் கூறினார்.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வித்யா, அக்ஷயா ஆகிய மூவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.