திருவள்ளூர்: அண்ணனை தம்பி வெட்டி கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த குமார சேரிப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு யோகண்ணா (24), இயேசு (22) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். நேற்று (பிப். 01) வீட்டிற்கு வந்த இயேசு, திடீரென அண்ணன் யோகாவை கத்தியைக் கொண்டு தலை, கழுத்தில் வெட்டிச் சாய்த்தார். இதில் சம்பவ இடத்திலேயே யோகண்ணா உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த மப்பேடு காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அண்ணனைக் கொலைசெய்ததற்காக, இயேசுவைக் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்துவருவதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.