திருப்பூர்: சந்தன மரக் கடத்தலைக் காட்டிக்கொடுத்த பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ளது மறையூர் கிராமம். மலை கிராமமான இங்கு சந்தன மரங்கள் அதிகளவில் உள்ளது. மறையூர் சந்தனம் உலகளவில் பிரசித்தி பெற்றது. இங்கிருந்துதான் சந்தன மரங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இச்சூழலில் இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கும்பலாகச் சேர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இச்சூழலில் சில மாதங்களுக்கு முன்பு காளியப்பன் என்பவர் மறையூர் அடுத்த பாலப்பட்டி பகுதியிலுள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்திவந்துள்ளார். இதைப்பார்த்த அவருடைய உறவுக்கார பெண் சந்திரிகா (34) ,காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கத்தியைக் காட்டிய சாமியார் - அடித்து துவைத்த ரஷ்ய பெண்!
இதையறிந்த காளியப்பன் தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடிவந்தனர். காவல் துறையில் தன்னை மாட்டிவிட்ட சந்திரிகா மீது காளியப்பன் கடும் கோபத்தில் இருந்தார். இவ்வேளையில், நேற்றிரவு (ஆகஸ்ட் 22) காளியப்பன் உள்பட 3 பேர் சந்திரிகா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சந்திரிகாவிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காளியப்பன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சந்திரிகாவை சரமாரியாக சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுஷாந்திற்காக பிரார்த்தனை செய்த 101 நாடுகளைச் சேர்ந்த மக்கள்!
துப்பாக்கி சத்தம் கேட்டு அருகிலிருந்த மலை வாழ் மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, அங்கிருந்து தப்பியோட முயன்ற காளியப்பன் உள்பட மூன்று பேரையும் பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். பின்னர் அங்கு வந்த மறையூர் காவல் ஆய்வாளர் சுனில் தலைமையிலான காவல் துறையினர், படுகொலை செய்யப்பட்ட சந்திரிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அடிமாலி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் சந்திரிகாவை படுகொலை செய்த காளியப்பன், மணிக்கண்டன், மாதவன் ஆகியோரை கைதுசெய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.