கன்னியாகுமரி: காசி என்பவர் சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் பழகி அவர்களுடன் உல்லாசமாக இருந்த படங்களை எடுத்து பெண்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
இதே வேளையில் இந்த சம்பவத்தை போன்று குமரி மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவரை ஆபாச படம் எடுத்து மிரட்டி அவரிடம் இருந்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;
எனக்கு 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். இவ்வேளையில் சென்ற வருடம் நாகர்கோவிலை அடுத்த கட்டையன்விளையைச் சேர்ந்த லோகேஷ் குமார் (28) என்பவர் ஃபேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார்.
இதை தொடர்ந்து நாங்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். அப்போது லோகேஷ் குமார் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நான் அவருடன் நெருக்கமாக பழகி வந்தேன். பின்னர் ஒருமுறை தொழில் சம்பந்தமாக வெளியூர் அழைத்துச் சென்றார். அங்கு நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம்.
இச்சூழலில் அவரது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என்று கூறி என்னிடம் இருந்து முப்பது பவுன் நகையை பெற்றுக்கொண்டார். அந்த நகையை வங்கியில் அடமானம் வைத்து இருப்பதாகவும், விரைவில் திருப்பித் தருவதாகவும் கூறினார். அதன்பின் கார் வியாபாரம் செய்யப் போவதாக கூறி 5 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் தற்போது வரை அவர் பணத்தை திருப்பித் தரவும் இல்லை, என்னை திருமணம் செய்து கொள்ளவும் இல்லை.
இதனால் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அவர் வீட்டுற்குச் சென்று கேட்டபோது லோகேஷ் குமாரும், அவரது தாயார் கீதா குமாரி, மாமா அய்யாசாமி, நண்பர் பிரதீப் ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் என்னை பேசித் தாக்கினர்.
தொடர்ந்து என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், கொடுத்த பணம், நகையை நான் திரும்ப கேட்டேன். அதற்கு என்னுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த ஆபாச காணொலிகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டுகிறார். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை நாகர்கோவில் மகளிர் காவல் துறை விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். அதன் பேரில், அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லோகேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய லோகேஷ் குமாரின் தாயார் கீதா குமாரி, மாமா அய்யாசாமி மற்றும் நண்பர் பிரதீப் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.