கன்னியாகுமரி: அதிமுகவினர் 5 பேர் சேர்ந்து பெண் கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கிய காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தாழக்குடி கிராம நிர்வாக அலுவலராக திருமலைபுரத்தைச் சேர்ந்த கல்யாணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சகாய நகர் ஊராட்சி துணை தலைவராக உள்ள அதிமுக பிரமுகர் ராஜம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில், ராஜம் அவரது கணவர் முருகன் ஆகிய இருவரும் அடியாள்களுடன் சென்று, கல்யாணியையும் அவர் குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த கல்யாணியும், அவர் குடும்பத்தினரும் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி காவல் துறையினர், அருகிலிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.