திருநெல்வேலி மாவட்டம் உவரி கடல் பகுதியில் சுருக்கு மடி வலை வைத்து மீன் பிடிக்க தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துவந்தனர். சுருக்குமடி வலை வைத்து சிலர் மீன்பிடிப்பதால் தங்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை என்றும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் உவரி கடல் பகுதியில் சுருக்கு மடி வலை வைத்து மீன் பிடிப்பதற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்திருந்தது. இந்நிலையில் உவரி கடல்பகுதியில் பெயர் தெரிந்த 11 பேர் உள்ளிட்ட 122 பேர் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வைத்து கடலில் மீன் பிடித்துள்ளனர். அப்போது ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குனர் விஜயராகவன் கடலில் சென்று எச்சரித்தும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் அவரை மிரட்டவும் செய்துள்ளனர்.
இதனால் சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீன் பிடித்த 122 நபர்கள் மீது கூடங்குளம் கடலோர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் உதவி இயக்குனர் விஜயராகவனை மிரட்டிய அடையாளம் தெரிந்த 12 நபர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.