மதுரை: பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி மோகன் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில் தனது மகள் நேத்ராவின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை ஏழை மக்களுக்காக மதுரையைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி மோகன் அளித்திருந்தார். மேலும், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து வழங்கிவந்தார்.
இச்சூழலில், மோகனின் இந்த செயலை மனதின் குரல் என்ற தனது வானொலி நிகழ்ச்சி மூலமாக இந்திய பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். இதனையடுத்து மோகனின் மகளும், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியுமான நேத்ராவை ஐநா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட யு.என்.ஏ.டி.ஏ.பி என்ற தொண்டு நிறுவனம், உலக ஏழைகளின் நல்லெண்ணத் தூதுவராக அறிவித்து கௌரவித்தது.
இதனையடுத்து மாணவி நேத்ராவுக்கு குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே மோகன் தனது குடும்பத்தாருடன் சமீபத்தில் பாஜகவில் இணைந்து அதன் உட்பிரிவு ஒன்றின் நிர்வாகியாகவும் அறிவிக்கப்பட்டார்
இவ்வேளையில், பாஜக நிர்வாகியான மோகன் மீது கந்துவட்டி புகாரின் பேரில் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்று (செப். 23) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மோகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தன்னை பழி வாங்கும் நோக்கில் கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை சட்டப்படி நான் எதிர்கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.