பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் ஞானமுத்து கனகராஜ். முன்னாள் ராணுவ வீரரான இவர், பாளையங்கோட்டை பகுதியில் துணிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி, குழந்தைகளைப் பயிற்சி வகுப்பிற்கு அனுப்பிவிட்டு, கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் கடையை அடைத்தபின்பு கணவருடன் இரவு 10 மணிக்கு வீடுதிரும்பியுள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியிலிருந்த 20 சவரன் நகைகளும், ஒன்பதாயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. புகார் அளிக்கப்பட்டதையடுத்து மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மற்றுமொரு கொள்ளைச் சம்பவம்
பழையபேட்டை ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி அருகில், கண்ணன் என்பவர் வசித்துவருகிறார். பேட்டையில் அரிசிக் கடை நடத்திவரும் இவர், தனது குடுத்பத்தினர் அனைவரும் வெளியூர் சென்றதால், மதிய உணவுக்குப் பிறகு மாலை ஆறு மணிக்குக் கடைக்குச் சென்றார். இரவு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அலமாரிகள் உடைக்கப்பட்டு அவற்றிலிருந்த 140 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்த அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து நகரக் குற்றப்பிரிவு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி மாநகரத்தில் சமீபகாலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளின் பூட்டுகளை உடைத்து சுமார் 40 சவரன் நகைகளும், ஒன்பதாயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.