புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த இளம் பெண் சமீபத்தில் காணாமல் போனார். அவர், கோயம்புத்தூர் சேரன் மாநகரில் ரஞ்சித்குமார் என்பவருடன் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருமயம் காவல்துறையினர், பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பீளமேடு காவல்துறையினர் நேற்று(அக்.29) சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வீடு பூட்டி இருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்திய போது, ரூ. 7.36 லட்சம் மதிப்பிலான போலி 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையைச் சேர்ந்த தீப்சித்(24), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராகவேந்திரன்(21) ஆகியோர் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தது தெரியவந்தது.
மேலும் தீப்சித் கார் ஓட்டுநராகவும், ராகவேந்திரன் வெல்டிங் பட்டரை ஊழியராகவும் பணியாற்றி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் காவல்துறையினர் இன்று(அக்.30) கைது செய்தனர்.பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல்துறையினர் கூறுகையில், கரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாத காரணத்தால், இருவரும் அசல் 2000 ஆயிரம் ரூபாய் தாள்களை நகல் எடுத்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது. இருப்பினும் இவர்கள் போலி ரூபாய் நோட்டுகளை முன்னதாகவே புழக்கத்தில் விட்டுள்ளனரா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அமராவதி ஆற்றில் மூழ்கிய அரசு மருத்துவர், அவரது மகன் உயிரிழப்பு!