திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி அருகேவுள்ள ஜி.குரும்பப்பட்டியில் வெங்கடேஷ், லட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். விவசாயக் கூலி வேலை செய்யும் இவர்களின் மகள் கலைவாணி வடமதுரை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 16ஆம் தேதி பள்ளி கோடைக் கால விடுமுறை காரணமாக கலைவாணிவீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்குச் சென்ற கலைவாணியின் தாயார் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்துபடி இருந்துள்ளது. லட்சுமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கலைவாணி கையில் வயருடன் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் துணையுடன் கலைவாணியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன், கலைவாணியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடமதுரை காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கிருபானந்தன் என்பவர் குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது. 17 வயது மாணவன் கிருபானந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, தனியாக இருந்த மாணவி கலைவாணியை பாலியல் துன்புறுத்தல் செய்து அவர் மீது மின்சாரம் பாய்ச்சிகொலை செய்தது தெரிய வந்துள்ளது. கிருபானந்தனை வடமதுரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.