சென்னை அண்ணா நகர் 18வது பிரதான சாலையில் செந்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான 'மார்ஜின் ஃப்ரீ' என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று மதியம் அந்த கடைக்குள் புகுந்த சில நபர்கள் கடை ஊழியர் கௌரி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு அவரை தாக்கி அங்கிருந்து ரு.53 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளனர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அறுத்து எறிந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கடை உரிமையாளர் செந்தில் முருகன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மீன் சரவணன் என்ற நபர் உட்பட சுமார் 25 பேர் அடங்கிய அடையாளம் தெரியாத கும்பல் தனது கடைக்குள் நுழைந்து ஊழியரையும் தாக்கி பணத்தை பறித்து சென்று விட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இதில் சம்மந்தப்பட்ட மீன் சரவணன் உள்ளிட்ட குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் கண்காணிப்பு காட்சிகளைக் வைத்து கடையினுள் நுழைந்து பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் யார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.