திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டையை அடுத்த சர்தார் புரத்தைச் சேர்ந்தவர் சுடலை. ஆட்டோ ஓட்டுநரான இவர், மே 3ஆம் தேதி இரவு நெல்லை டவுன் ஆர்ச் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக டவுன் காவல் துறை தனிப்படை அமைத்து விசாரித்த வந்த நிலையில், கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மூலம் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநெல்வேலி சர்தார் புரத்தைச் சேர்ந்த முருகன் என்ற பெயரையுடைய இருவர் சேர்ந்து, சுடலையை வெட்டிக்கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்தது. இருவரும், தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முருகன் என்பவருடைய மனைவியுடன் மண உறவைத் தாண்டிய காதலால் சுடலை வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் இந்தக் கொலை சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
அரிவாளால் பல முறை வெட்டப்படுவதும், சுடலை உயிரை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடுவதும், சாலையில் செல்பவர்கள் அவரைக் காப்பாற்றாமல் செல்வதும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.