தெலுங்கு திரைப்படங்கள், சின்னத் திரையில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி சாய்நாத். தேனாம்பேட்டையில் வசித்துவரும் இவர், கடந்த 9ஆம் தேதி பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது அதனை டெலிவரி செய்யவந்த பரமேஸ்வரனுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து, கோபமடைந்த பரமேஸ்வரன், காயத்ரியின் செல்போன் எண்ணை ஆபாச வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து காயத்ரியை பலரும் தொடர்புகொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் காயத்ரி தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
குறிப்பாகச் சேலத்தைச் சேர்ந்த சக்திவேல், பெங்களூருவைச் சேர்ந்த சந்திரபோஸ் உள்ளிட்டோர் மீது புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக தேனாம்பேட்டை மகளிர் காவல்நிலைய காவலர்கள் அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
அப்போது, ஆபாச காணொலிகளைப் பகிர்ந்துகொள்வதற்காக வைத்திருந்த வாட்ஸ்அப் குழுவில், நடிகை காயத்ரியின் எண்ணை பரமேஸ்வரன் பதிவிட்டதும், அதை வைத்து மற்றவர்கள் தொடர்புகொண்டதும் தெரியவந்தது.
பின்னர், டாமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரனை விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல சக்திவேல், சந்திரபோஸ் ஆகியோர் ஆபாசமாகப் பேசியதும் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் காவல் துறையினர் மூன்று பேரையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், மூவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பீட்சா டெலிவரியில் தகராறு: நடிகையின் நம்பரை ஆபாச வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட இளைஞர்!