மயிலாப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனை செய்த மயிலாப்பூர் கச்சேரி ரோட்டைச் சேர்ந்த யாசர் (21) மற்றும் டாக்டர் நடேசன் சாலையைச் சேர்ந்த சபாபதி (25) ஆகிய இருவரையும் பிடித்து தனிப்படை காவல் துறையினர் விசாரித்தனர். இதில், யாசர் சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருவது தெரிய வந்துள்ளது.
யாசரும், சபாபதியும் சேர்ந்து, 'நெதர்லாந்து பட்' வகை கஞ்சாவை, விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஆசிஃப்கான் (24) என்பவர் உதவியுடன், லாரிகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில், உள்ளே இருக்கும் தண்ணீருக்குப் பதிலாக கஞ்சாவை நிரப்பி, அந்த பேட்டரிகளை கொரியர் மூலம் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரவழைத்து, நூதன முறையில் கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த மயிலாப்பூர் காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன் பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேர் கைது