சென்னை வடபழனி 100அடி சாலையில் 'அம்பிகா எம்பையர்' என்ற பெயரில் தனியார் நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக மோசடி நபர்கள் 3 பேர், கேரளாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தினரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி அந்த பிரபல நிறுவனத்தின் மேலாளர் குலாம் நபி சென்னைக்கு வந்துள்ளார்.
பின்னர் அந்த 3 நபர்களும் வடபழனியில் உள்ள 'அம்பிகா எம்பையர்' ஹோட்டலிற்கு, குலாம் நபியை அழைத்துச் சென்று முழுவதையும் சுற்றிக் காண்பித்துள்ளனர். மேலும், ஹோட்டலின் விலை ரூ.165 கோடி எனவும், முன்பணமாக பத்திரப் பதிவுக்கு ரூ.10 கோடி தர வேண்டும் எனவும் குலாம் நபியிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த குலாம் நபி, பணத்தைக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு, அந்த ஹோட்டலின் பொது மேலாளர் மோகனிடம் விற்பனை பற்றிக் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மோகன், உடனே வடபழனி காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார்.
பின்னர், அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி, இந்த மோசடியில் ஈடுபட்ட மோசடி நபர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையை அடுத்த சேலையூரைச் சேர்ந்த பரமானந்தம் (53), திருமுல்லைவாயிலைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (75), தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருணாகரன் (53) ஆகியோர் என்பதும், இவர்கள் மூவரும் கேரள நிறுவனத்தை ஏமாற்றி, 'அம்பிகா எம்பையர்' ஹோட்டலை விற்க முயன்றதும் தெரியவந்தது.
பின்னர், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் தீக்குளிக்க முயற்சி!