தூத்துக்குடி: ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நபரிடமிருந்து தங்க மாலை, செல்போன் ஆகியவற்றை சுருட்டிய திருடரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (41), இவர் மே மாதம் 28ஆம் தேதி ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது, கரையில் தனது மூன்று சவரன் தங்க மாலை, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி குளித்துள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது கரையில் வைத்திருந்த தங்க மாலை, செல்போன் ஆகியன திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் சாயர்புரம் சேர்வைகாரன்மடத்தைச் சேர்ந்த சக்திவேல் (31) என்பவர் புஷ்பராஜின் பொருட்களைத் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி, உதவி ஆய்வாளர் முருக பெருமாள், காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் சக்திவேலை கைதுசெய்தனர். அவரிடமிருந்து மூன்று சவரன் தங்க மாலை, செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.