சென்னை ஆவடி அருகே இன்று(27/6/2019) மாலை நேரத்தில் நான்கு வயது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அவர்கள் வீடு திரும்பியபோது சிறுமி காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அருகே உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர்.
பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கழிவறையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அருகே வசித்து வரும் உறவினரான 60 வயதுடைய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது சந்தேகம் எழுந்ததுள்ளது. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மீனாட்சி சுந்தரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.