நாமக்கல்: திருச்செங்கோடு பழைய சேலம் ரோடு பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஜெய பரணி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கடையின் உரிமையாளர் முத்துசாமிக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த முத்துசாமிக்கு கடையில் உள்ள 45 சவரன் தங்க நகைகள்,10 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் முத்துசாமி புகார் அளித்தார். பின்பு கைரேகை நிபுணர்களுடன் அங்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிகாலை நேரத்தில் கடையின் பூட்டை உடைத்த ஐந்து நபர்கள் நகைகளை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.