சென்னையிலுள்ள போரூர் பகுதி மவுண்ட் சாலையில் கர்நாடக வங்கியின் ஏடிஎம் அமைந்துள்ளது. இதில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஹைதராபாத்திலுள்ள வங்கியின் கட்டுப்பாடு அறைக்கு இது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கொள்ளை முயற்சி தொடர்பாக கட்டுப்பாடு அறையிலிருந்து போரூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் சென்றபோது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் இயந்திரத்தில் உள்ள பணம் வைக்கப்பட்டிருந்த பகுதியை எடுக்க முடியாமல் அங்கிருந்து தப்பியோடியது கண்டறியப்பட்டது.
இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், தகவலறிந்து உரிய நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்ததால் 10 லட்சம் ரூபாய் பணம் திருடப்படாமல், இயந்திரம் மட்டும் சேதப்படுத்தப்பட்டது. ஏடிஎம் மையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடும் முயற்சியில் ஈடுபடப்போவதாக கூறினர்.