கன்னியாகுமரி : நெல்லை மாவட்டம், பனங்குடியைச் சேர்ந்தவர், ஐயப்பன். இவர், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும், வழக்கம் போல் கடையை அடைத்து விட்டுச் சென்றுள்ளார். இன்று(அக்.18) காலையில் கடை திறக்க சென்ற ஐயப்பன், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடையின் உள்ளே சென்று பார்த்தவருக்கு, ரூ. 15 ஆயிரம் ரொக்கம், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனுடன் திருட வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, கடையில் இருக்கும் சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து, ஐயப்பன் ஆரல்வாய்மொழி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல் துறையினர், கடையில் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடு புகுந்து கொள்ளையடித்த பலே திருடர்கள் கைது!