திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் பகுதியில் ஸ்டேட் வங்கி கிளை ஒன்று உள்ளது. இந்த வங்கியில், கடந்த பிப்ரவரி மாதம் ஷட்டரை உடைத்து, சுமார் 300 பவுன் தங்கம், ரொக்கப் பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
தனிப்படை காவலர்கள், பிகார், மத்தியப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, வங்கிக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனில்குமார், இஸ்ரோ கான், ஆச்சார்யா, ராமன்ஜி ஆகிய, 4 பேரை கடந்த மார்ச் மாதம் கைதுசெய்தனர்.
தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட, ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டம், தோடாபீம்பைச் சேர்ந்த கெஜராஜ் (33) என்பவரைத் தனிப்படை காவலர்கள் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில், வேறு ஒரு வழக்கில் கெஜராஜை ஹரியானா காவல் துறையினர் கைதுசெய்தனர். பல்லடம் வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில் கெஜராஜுவுக்குத் தொடர்பு இருப்பதை அறிந்த ஹரியானா காவல் துறையினர், காமநாயக்கன் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கெஜராஜை, பல்லடம் அழைத்து வருவதற்கான ஆவணங்களை தனிப்படை காவலர்கள், ஹரியானா காவல் துறையினருக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து கெஜராஜை அழைத்துக்கொண்டு ஹரியானா காவல் துறையினர் இன்று (நவ.20) பல்லடம் வந்தனர்.
பின்னர் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹரிராம் முன் முன்னிறுத்தினர். பாரத ஸ்டேட் வங்கியின் முக்கியக் குற்றவாளி, 10 மாத தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!