2016ஆம் ஆண்டில் காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின்படி, தமிழ்நாடு அரசு 47.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு வாக்கி டாக்கிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு மட்டும் டெண்டர் கொடுக்கப்பட்டு, சுமார் 83 கோடி ரூபாய்க்கு 4,000 வாக்கி டாக்கிகளை காவல்துறை பெற்றுள்ளது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அப்போதைய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதினார்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்த வலியுறுத்தினர். இம்முறைகேட்டில் அப்போது தொழில்நுட்பப் பிரிவு கண்காணிப்பாளராக இருந்த அன்புச்செழியன் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளராக இருந்த சந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வாக்கி டாக்கி ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தொழில்நுட்பப் பிரிவு கண்காணிப்பாளராக இருந்த அன்புச்செழியன், பட்டினபாக்கத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களான ரமேஷ் மற்றும் உதயசங்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று, தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் வீடுகளில் இச்சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது.
இச்சோதனையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் 12 குழுக்களாகப் பிரிந்து மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் முடிவில் வாக்கி டாக்கி டெண்டர் ஊழல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: #TNPSCscam : மூடி மறைக்கும் எடப்பாடி அரசு - வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!