வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவர், பாலாஜி. இவரது பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மெசேஞ்சரில் பாலாஜியின் நண்பர்களிடம் சேட்டிங் செய்து பணம் பறிக்க முயன்றுள்ளார்.
அந்த மெசேஞ்சரில் தனது உறவினர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக எனக்கு 20ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது எனக் கேட்டுள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் ஒரு சிலர், பாலாஜியிடம் போன் செய்து கேட்டுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாலாஜி, "தன் பெயரில் பணம் கேட்டு வரும் தகவல்கள் தவறானது. அது போலியான ஃபேஸ்புக் கணக்கு. ஆகவே, யாரும் அதை நம்ப வேண்டாம். எந்த வித பணமும் அனுப்ப வேண்டாம்" என தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைமில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஃபேஸ்புக்கில் போலி கணக்குத் தொடங்கி பணம் பறிக்க முயன்ற நபரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த மாதம், வேலூர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கும், வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி இ மெயில் கணக்கும் தொடங்கிப் பணம் பறிக்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண் குழந்தைகள் பெயரில் பெயர் பலகை!