திருவண்ணாமலை: ரஷ்யப் பெண்மணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய சாமியாரை பிடித்து பொதுமக்கள் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள ருத்ராட்ச இல்லத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்மணி ஜனவரி மாதத்திலிருந்து தங்கியிருக்கிறார். இன்று காலை கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சாமியார் ரஷ்ய பெண்மணி தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத கராத்தே பயின்றுள்ள ரஷ்ய நாட்டு பெண்மணி ஆயிஷா, கத்தியை பிடிங்கி மணிகண்டனை தற்காப்புக்காக தாக்கியுள்ளார். இதில் சாமியார் மணிகண்டனின் நெற்றி, கைகளில் கீறல் விழுந்தது.
யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!
சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ஆயிஷாவை மீட்டு சாமியார் மணிகண்டனை பிடித்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த், துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, சாமியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் அவ்வப்போது வந்து அண்ணாமலையாரை தரிசித்து, கிரிவலம் செல்வதற்கு அங்கே அருகில் உள்ள வாடகை குடியிருப்புகளில் தங்கியிருந்துவிட்டு செல்வது வழக்கம். கிரிவலப் பாதையில் நூற்றுக்கணக்கான ஆதரவற்றோர்களும், சாதுக்களும், சாமியார்களும் கிரிவல பாதையைச் சுற்றி வசித்துவருகின்றனர்.
ரூ.3.56 கோடி கஞ்சா பறிமுதல்; வருவாய் புலனாய்வு அலுவலர்கள் அதிரடி!
இச்சூழலில் வெளிநாட்டைச் சேர்ந்த ரஷ்ய பெண்மணி ஆயிஷாவிடம் சாமியார் மணிகண்டன் அத்துமீறி சென்று கத்தியை காட்டி பணம் பறிக்க மிரட்டினாரா? அல்லது பலாத்காரம் செய்வதற்காக மிரட்டினாரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த சம்பவம் ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.