கோயம்பேடு சாஸ்திரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வருபவர் பாஸ்கர். இவர் நேற்றிரவு பணி முடித்து ரேஷன் கடையில் பொங்கலுக்கு கொடுக்க வைத்திருந்த, ரூ.8 லட்சம் பணத்தை பையில் எடுத்துக்கொண்டு, தன்னுடன் பணியாற்றும் நண்பர் சக்திவேல் என்பவருடன் கோயம்பேட்டில் மது அருந்தியுள்ளார்.
பின்னர், அரும்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு பாஸ்கர் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு பெண், பாஸ்கரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி அப்பெண்ணுடன் பாஸ்கர் ஆட்டோவில் ஏறி பாரிஸில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுள்ளார். ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது, பாஸ்கரிடம் பணம் கேட்ட அப்பெண், இல்லையெனில் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூச்சலிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாரிஸில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து வந்து கொடுத்துவுடன், அவரை அங்கேயே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
பின்னர் தான் வைத்திருந்த பையை பாஸ்கர் சோதனை செய்து பார்த்தபோது, அதிலிருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தில் 5.15 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து வடக்கு கடற்கரை காவல்துறையினரிடம் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் பணம் திட்டமிட்டு வழிப்பறி செய்யப்பட்டதா அல்லது பாஸ்கர் நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும், மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டும் வடக்கு கடற்கரை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: தடயவியல், அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள் சோதனை