மெரினா கடற்கரை அருகேயுள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராம் (எ) ராம்குமார் (24). ஆட்டோ ஓட்டுநரான இவர் மீது ஏற்கனவே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் ராம்குமார், நடேசன் சாலையிலுள்ள ஒரு கடையின் முன்பு தனது நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ராம்குமாரை கத்திஇ உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர், அங்கிருந்து ராம்குமாரை ஆட்டோவில் கடத்திக்கொண்டு நடுக்குப்பம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையினுள் வைத்து தாக்கியபின், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராம்குமாரை ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிகழ்வு குறித்த தகவலின்பேரில் அங்கு வந்த மயிலாப்பூர் காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நடுக்குப்பத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தன் கூட்டாளிகளுடன் ராம்குமாரை தாக்குவதும், கடத்திச்செல்வதும் பதிவாகியிருந்தது.
ஏற்கனவே முன்பகை இருந்துவந்த குமாரின் நண்பரை ராம்குமார் தாக்கியதாகவும், அதற்கு பழிவாங்குவதற்காகவே ராம்குமாரை தாக்கி, ஆட்டோவில் கடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து மயிலாப்பூர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு!