தூத்துக்குடியை அடுத்த தம்பிக்கை மீண்டான் மறவன்மடத்தைச் சேர்ந்தவர் ரவுடி வீ.ஜெயமுருகன் (45). இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் ஆத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நெல்லையைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி, கண்ணன் ஆகிய இருவரை தனது கூட்டாளிகளுடன் இணைந்து படுகொலை செய்தார். இந்த இரட்டைப்படுகொலை அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த இரட்டை கொலை வழக்கு மட்டுமல்லாமல் ஆத்தூர் வெடிக்குண்டு வீச்சு, சிப்காட் கொலை வழக்கு, முத்தையாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மிரட்டல் விடுத்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வழக்குகளில் இருந்து தப்பிக்க ரவுடி ஜெயமுருகன் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்த அவரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கீழ் ஈராலில் ஜெயமுருகன் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலில் அடிப்படையில், இன்று (ஜன.12) அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின்போது, ரவுடி ஜெயமுருகன் கைது செய்யப்பட்டார்.
இரட்டை படுகொலை, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜெயமுருகன் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு!