சென்னை பெரம்பூர் செம்பியம் சுப்ரமணியன் தெருவில் தனது கணவருடன் நடைபயிற்சியில் ஈடுபட்ட சுபாஷினி என்பவரிடம் மூன்று பேர் கொண்ட கும்பல் ஏழு சவரன் தங்கநகையைப் பறித்துச் சென்றனர். இது குறித்து சுபாஷினி கொடுத்த புகாரின்பேரில் செம்பியம் காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.
அதில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (எ) ஸ்பீடு அஜீத், வியசார்பாடியைச் சேர்ந்த ஆகாஷ், ராஜேஷ் ஆகிய மூவரைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து ஏழு சவரன் தங்க நகை, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, நேற்று (டிச. 02) செம்பியம் காவல் நிலையத்திலிருந்து திருடப்பட்ட செல்போன்களைப் பறிமுதல்செய்வதற்காக அஜீத், ஆகாஷ் ஆகிய இரண்டு பேரை காவல் துறையினர் பெரம்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அஜீத், ஆகாஷ் இருவரும் காவல் துறையினரின் கவனத்தை திசை திருப்பி தப்பியோடினர். இந்நிலையில், காவல் துறையினருக்குப் போக்குக்காட்டி தப்பியோடிய இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
மேலும், நகைப்பறிப்பு கொள்ளையர்களைத் தப்பிக்கவிட்ட காவலர்கள் மீது துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவையில் சாலை விபத்து: முதியவர் உயிரிழப்பு