தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாலு. இவர் கடந்த ஜன 31ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வாழவல்லான் அருகே சரக்கு வாகனம் ஏற்றி முருகவேல் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முருகவேல் பிப்ரவரி 2ஆம்தேதி காலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதைத்தொடர்ந்து முருகவேலை காவல்துறையினர் கைது செய்து தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். முன்னதாக ஜனவரி 30ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த முருகவேல் அவரது மனைவி செல்வலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த செல்வலட்சுமி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
இதனையடுத்து செல்வலட்சுமியை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தூத்துக்குடியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ்நாடு டிஜிபி!