திருவல்லிக்கேணியில் நேற்றிரவு (அக்டோபர் 19) காவல்துறையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகேயுள்ள, ஆசியன் லாஜிஸ்டிக்ஸ் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை செய்த போது கணக்கில் வராத, 12.20 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அதை ஏடிஎம் மூலமாக தன் கணக்கில் செலுத்த முயன்றதும் தெரிய வந்தது.
பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, நாங்குநேரியைச் சேர்ந்த சையது சலாவுதீன் என்பது தெரிந்தது. மேலும், ஐஸ் ஹவுஸ் பகுதி லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சலாவுதீனின் நண்பர்களான மொய்தீன் சஃபீக், மொய்தீன் ரியாஸ், அப்துல் அஜீஸ் ஆகியோரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 12.20 லட்ச ரூபாய், ஹவாலா பணமாக இருக்குமோ என சந்தேகித்துள்ள காவல்துறையினர், அப்பணம் எப்படி வந்தது? பணம் டெபாசிட் செய்ய இருந்த வங்கிக்கணக்கு யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள ஏசியன் லாஜிஸ்டிக் கம்பெனிக்கு பணம் போடுவதற்காக எடுத்து வந்ததாகவும், 14 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை, 96,500 ரூபாய், 96,500 ரூபாய் என இருமுறை செலுத்திவிட்டு, மீதமுள்ள 12,53,000 ரூபாயை வைத்திருந்த போது சையத் சலாவுதீன் பிடிபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மண்ணடியில் தொழிலதிபர் திவான் அக்பர் என்பவரை கடத்திச் சென்று ரூ. 2 கோடி பறிக்கப்பட்டது. இதில் 8க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால், இதுவரை அப்பணம் முழுமையாக பறிமுதல் செய்யப்படவில்லை. கடத்தல் கும்பல் தலைவன் தவ்பீக் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.
இந்நிலையில், தற்போது அண்ணா சாலையில் பிடிபட்டுள்ளவர்களுக்கும், தவ்பீக்குக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் இணைப்பு பெற ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது!