சென்னை: பாதாளச் சாக்கடை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தாம்பரம் நகராட்சிக்கு உள்பட்ட பர்மா காலனியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பொக்லைன் இயந்திரம் மூலம் 15 அடி ஆழம் தோண்டிய பள்ளத்தில், 8 கூலித் தொழிலாளர்கள் பணி செய்தனர்.
அப்போது இரும்பு குழாயை பொக்லைன் மூலமாகப் பக்கவாட்டில் தள்ளியுள்ளனர். அதில் ஏற்பட்ட அதிர்வினால் பக்கவாட்டு மண் சரிந்து விழுந்துள்ளது. இதில் திருவொற்றியூரைச் சேர்ந்த சேகர் (28), மரக்காணத்தைச் சேர்ந்த பாரதி (21) ஆகிய இருவர் சிக்கினர்.
இதையும் படிக்கலாம்: ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? - அற்புதம்மாள் வேதனை!
தகவலறிந்து வந்த இரண்டு வாகனத்தில் வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், சேகர் உயிரிழந்துள்ளார். பாரதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் காவல் துறையினர், ஒப்பந்ததாரர் வாசுதேவ ரெட்டி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.