தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபடும்பொழுது பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம், போக்குவரத்துத் துறை அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகிய நான்கு இடங்களுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி கருவூலத்தில் 500 ரூபாய் செலுத்தி மாநகராட்சி ஊழியர்கள் குப்பை அல்ல வரி ரூ.300, தொழில் வரி ரூ.750 செலுத்த வேண்டும். அதன்பின் இந்த ஆவணங்களை எல்லாம் பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பர். அதன் பின் ஒவ்வொரு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு கடைகள் வைப்பதற்கு உரிமம் வழங்குவர்.
வருகிற நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசு கடை வைப்பதற்கு குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மதனவேல் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இதற்கு அனுமதி தர வேண்டும் என்றால் 6,000 ரூபாய் கையூட்டு வழங்க வேண்டும் என்று கோயம்புத்தூர் தெற்கு தீயணைப்புத் துறை அலுவலர் சசிகுமார் என்பவர் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மதனவேல் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளில் மதனவேலிடம் வழங்கி அதை சசிகுமாருக்கு தரும்படி கூறியுள்ளனர்.
அதேபோல் மதனவேலும் சசிகுமாரிடம் அந்த ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை வழங்கும்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக சசிகுமாரை கைதுசெய்தனர். இது குறித்து சசிகுமாரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வலுக்கட்டாயமாக சிறுவர்கள் வாயில் மது ஊற்றும் இளைஞர்கள் - வெளியான சிசிடிவி காட்சி!