தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(25), கடந்த வாரம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி காட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இறந்தவரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்து வந்த நிலையில், கொலையில் தொடர்புடைய சுடலை முத்து, சுடலை, முத்துக்குமார் மற்றும் சின்னத்துரை ஆகிய நான்கு பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
காவல் துறையினர் அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சதீஷ்குமார் பொதுமுடக்கத்தால் சொந்த ஊர் திரும்பியுள்ளார். பணிபுரியும் இடத்தில் நான்கு நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று நான்கு பேரும் சதீஷ்குமாரை நடுவக்குறிச்சிக்கு அழைத்து காட்டுப் பகுதியில் மது அருந்தி சமைத்து சாப்பிட்டனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நான்கு பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை விறகு கட்டை மற்றும் கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. சதீஷ்குமார் தங்களை இந்தியில் திட்டியதால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ததாக நான்கு பேரும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.
பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட சதீஷ்குமாரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், தனது மகனின் மரணத்திற்கு உண்மையான காரணம் கேட்டும், நீதி வேண்டியும் தாயார் சுபஸ்ரீ இன்று (அக்.5) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்தி பேசிய ஒரே காரணத்திற்காக தன் மகன் கொலை செய்யப்பட வாய்ப்பில்லை. அவரது கொலைக்கு உண்மையான காரணத்தை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஹத்ராஸ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் மீது வழக்குப்பதிவு