தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எம்.செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (20). மினி லாரி ஓட்டுநரான இவருக்கு தர்மபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் இவர்கள் இருவரும் செல்போனில் பேசி, பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்களின்போது லெனின், வாட்ஸ்அப் மூலமாக சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், புதிய தொழில் தொடங்க பணம் தேவைப்படுவதாக கூறி சிறுமியிடமிருந்து, 25 சவரன் தங்க நகைகளை வாங்கி உள்ளார்.
தொடந்து, சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 25 சவரன் நகை, சிறுமியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வர, அவர்கள் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, சிறுமியை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் மற்றும் நகை பறிப்பு செய்த லெனினை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லெனினின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவர் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து சிறுமியை மிரட்டினாரா, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா போன்ற கோணங்களில் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: புத்த ஜெயந்தி பூங்காவில் பெண் தீக்குளிப்பு - போலீஸ் தீவிர விசாரணை