நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள நீடூர் கீழத்தெரு காலனிப் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (60) குடும்பத்தாருக்கும் கண்ணதாசன், வேல்முருகன் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்துவந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி இரவு கண்ணதாசன், வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் இளங்கோவன் தரப்பைச் சேர்ந்த எட்டு நபர்களை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினர்.
அதில், இளங்கோவன் மகன் இளவரசன் (35), தங்கமணி (32) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த ஆறு பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவத்தில் 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளதுரை ஆகியோர் காவல் துறை தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடிவந்தனர்.
இதில், வினோத் (24), திருமுருகன்(32), அரிவேளூர் ராஜாமான்சிங் (29), கஜேந்திரன்(58), வேல்முருகன்(32), ராஜேந்திரன் மகன் நவீன்ராஜ் (19), ஆகிய ஆறு நபர்களைக் கைது செய்து காவலில் அடைத்தனர்.
இதையடுத்து, தற்போது மேலும் ஏழு நபர்களான நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (20), கபில்ராஜ் (22), கோபி (18), ஸ்டீபன்ராஜ் (26), கிஷோர்ராஜ் (19), அனந்தகுமார் (21), ஜீவா (19), ஆகியோரைக் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர்.
தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.