திருப்பத்தூர்: கொடுத்த பணத்தை நண்பர்கள் திருப்பி தராத விரக்தியில் விவசாயி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வாணியம்பாடி அடுத்த தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியான புல்லூர் மேல்பள்ள தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராம்குமார் (35). இவர் 2016இல் புத்துகோவில் பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான சந்தோஷ், மோகன், சரவணன் ஆகிய மூன்று பேரும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ராம்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர்.
நண்பர்கள் கேட்டதால், தன் தந்தை மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றபோது கிடைத்த பணத்தையும், அதனுடன் வேறு இடத்தில் கடன் வாங்கி மொத்தமாக 7 லட்சம் பணத்தை நண்பர்களுக்கு ராம்குமார் கொடுத்துள்ளார்.
இச்சூழலில் ஐந்தாண்டுகள் ஆகியும், பணத்தை நண்பர்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தான் கடன் வாங்கிய பணத்திற்கு வெளியே வட்டி கட்டி வந்துள்ளார் ராம்குமார். மற்றொரு புறம் பணத்தை நண்பர்களிடம் திருப்பி கேட்டபோது, அவர்கள் மூவரும் ராம்குமாரை மிரட்டியுள்ளனர்.
இதனால் செய்வதறியாது தவித்த வந்த ராம்குமார் நேற்றிரவு தன்னுடைய மனைவி, மூன்று பிள்ளைகள் தூங்கியபிறகு, தன்னுடைய சாவுக்கு காரணம் தன்னிடம் பணம் பெற்றத் தனது நண்பர்களான சந்தோஷ், மோகன், சரவணன் ஆகியோரே என கடிதம் எழுதி வைத்துவிட்டு தனி அறையில் சென்று தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற திம்மாம்பேட்டை காவல் துறையினர் தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பிரச்னை காரணமாக, திரும்பி சென்றுள்ளனர். 16 மணி நேரத்திற்குப் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு குப்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரின் நண்பர்களை தேடி வருகின்றனர்.