ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற நவீன தகவல் தொடர்பு செயலிகள் பலவிதங்களில் சமுதாயத்திற்கு பயனளிக்கின்றன. தகவல் தொடர்பை எளிதாக்கி, சிரமமற்ற, உடனடி தொடர்புக்கும், பொழுது போக்கிற்கும், உலக நடப்புகளை உடனுக்குடன் அறிவதற்கும் இவை பேருதவி புரிகின்றன. அதேவேளயில், இவற்றை தவறாகப் பயன்படுத்தி சமூகத்தை சீரழிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாகி இருக்கிறார் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அழகர் (24) என்ற இளைஞர்.
செங்கல்பட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த அழகரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, கஞ்சா விற்பனைக்கு என்றே தனியாக வாட்ஸ் ஆப் குழு ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவர் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அழகரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 1,200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அழகர் செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்தில் 7 மாதங்களில் ரூ.3.31 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!