விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் கலையரசன் (24). இவர் கடலூர் வண்டிப்பாளையத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து, செல்போன் விற்பனைக் கடையில் வேலை பார்த்து வந்தார். அதே செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட, இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதலை வீட்டில் தெரிவித்தபோது, இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி, பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுத்துள்ளனர். இதற்கு பின் அந்தப் பெண் கலையரசனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கலையரசன், காதலித்தபோது தனக்கு அனுப்பிய அந்தப் பெண்ணின் நிர்வாணப்புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ளார். இது அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவர, கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலையரசனை கைது செய்ததோடு, அவரது ஃபேஸ்புக் கணக்கையும் முடக்கினர். காதலனே தனது காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்ப்பிணி காதலியை கரம்பிடிக்க மறுப்பு: மன்னார்குடியில் இளைஞர் தலைமறைவு