சென்னை: வாட்ஸ்அப் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து பெண்களிடம் பணத்தை ஏமாற்றியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து அதில் புத்தம் புது ஆடைகளின் புகைப்படத்தை பதிவிட்டு மிகக்குறைந்த விலையில் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பல பெண்கள் குறைந்த விலையில் கிடைப்பதாக எண்ணி பிடித்த ஆடையை தேர்ந்தெடுத்து அதற்குண்டான தொகையை அவரது வங்கி கணக்கிற்கு செலுத்தி வந்துள்ளனர்.
பின்னர் நீண்ட நாள்களாக ஆடை வராததால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர் அவரின் செல்ஃபோன் எண்ணை தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இதேபோல் தொடர்ந்து பல பெண்கள் புளியந்தோப்பு சைபர் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த நபரின் செல்ஃபோன் எண், வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணையில் மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் பெயரில் செல்ஃபோன், வங்கி பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில், முகநூலில் அதிகமாக புத்தாடை விரும்பும் பெண்களை குறிவைத்து அவர்களின் செல்ஃபோன் எண்ணை எடுத்து வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து அவர்களை குழுவில் சேர்த்துள்ளார். பின்னர் இணையதளங்களிலிருந்து புதிய ஆடைகளின் புகைப்படங்களை எடுத்து குறைந்த விலைக்கு தருவதாக கூறி குழுவில் பதிவிட்டுள்ளார்.
இதனை நம்பிய பெண்கள் ஆடைகளின் தொகையை ராஜேந்திரனின் வங்கி கணக்கிற்கு செலுத்தியவுடன் அந்த பெண்ணின் எண்ணை குழுவில் இருந்து நீக்கியும், பிளாக் செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதும் வழக்கமாக கொண்டுள்ளார். இதேபோல் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவரிடமிருந்து செல்ஃபோன், ஆறு சிம் கார்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து ராஜேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரீசார்ஜ் பண்ண வந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர் கைது!